Thursday, September 23, 2010

மனிதம் வென்ற அவசரம்

நெரிசல் மிகுந்த சந்திப்பு ஒன்றில்
நலிந்து போன சிறுமி ஒருத்தி
உறுமும் வாகனங்களுக்கு மத்தியில்
சிறு வளையத்துடன்  வித்தை
காட்டிக்  கொண்டு இருந்தாள்.
ஈரம் கசிந்து எடுத்த சில்லறைகளை
கொடுப்பதற்குள் கடந்து விட்டார்கள்.
எல்லோரும் விரும்பிய பச்சை விளக்கு
அவள் சிற்றுணவிற்கு மட்டும்
சிவப்பு விளக்காய்...

Sunday, September 12, 2010

அழைப்பு

மரணத்திற்குப்  பிறகு
ஆன்மா எங்கே  செல்லும்
எனத் தெரியவில்லை.
ஆனால்,
வாகனத்தில் செல்லும் போது 
வேகமுள் எல்லையைக் கடக்கும்
எல்லாத் தருணங்களிலும் தெரிகிறது
விபத்தில் மரித்த நண்பனின் முகம்.

Thursday, September 9, 2010

ஊமைக் கனவுகள்

கீழே மேலே செல்லாமல்
வறுமைக் கோட்டிற்குள் வாடகை
இருக்கும் நடுத்தரக் குடும்பங்கள்.
தினமும் மலர்ந்து சருகாகும்
ஈசலைப் போன்றது எங்கள் கனவுகள்.

பட்டுப் புடவை மீதான அம்மாவின் ஏக்கம்
தொடர் நாடகங்களின் கண்ணீராய் கரைகிறது.

புது வாகனம் வாங்கும் அப்பாவின் ஆசை முன்பு
பாட்டியின் மருத்துவச் செலவு பல் இளிக்கிறது.

குட்டித்தம்பியின் இன்பச் சுற்றுலாவிற்கு
குடக்கூலி வந்து குடைச்சல் தருகிறது.

தாவணிக்கனவுகளுடன் தங்கைகள் இருப்பதால்
அண்ணனின் காதல் அடகு வைக்கப்படுகிறது.

கேக் வெட்ட ஆசைப்படும் பிறந்த நாட்கள்
ஆரஞ்சு மிட்டாயுடன் அமைதியடைகிறது.

தினசரி குளிக்கும் ஆசை கூட
தண்ணீர் வண்டியின்  பின்னால்
வரிசையில்  காத்திருக்கிறது.

விரக்திகளில் வீழாமல்,
விடியலுக்காய் போராடும் 
எங்களின் நம்பிக்கை 
அரிதாக அருளும் கடவுளும்,
அடுத்த தலைமுறைக்  கல்வியும்...