Wednesday, October 19, 2011

பொருள் வயின் பிரிதல்

Switch Case-ன் Variable போல கல்லூரியிறுதி 
நம் கனவுகளின் பாதைகளை வேறாக்கியது .

மழை கண்ட மரமாய் உடல் பருத்தது. ஆனால் 
மனம் புரியும் நட்பின் வட்டம் சிறுத்தது.

கையடக்க i-phone-ல் உலகமே உள்ளது. ஆனால்
அடிக்கடி SMS அனுப்ப ஆர்வமும் இல்லை,
Nokia 1100-வைப் போல் வசதியும் இல்லை. 

பல கை அளாவிய Mess Noodles 
Italian Restaurant -ல் கிடைப்பதில்லை.
Krishna Bakes Coffee-யின் சுவையை 
Cafe Coffee Day கூட தருவதில்லை.

அனுதினமும் அன்பைப் பொழிந்த தோழிகள் 
திருமணத்திற்கு அழைக்க மட்டுமே 
அலை பேசுவதுண்டு. அதிலும் சிலவை 
சம்பிரதாய மின்னஞ்சல்களாக மட்டும்.

இன்றிரவாவது நண்பனை அழைக்க 
மனம் நினைக்கும். ஆனால், இடையராத 
பளுவினால் தூக்கம் வந்து தொலைக்கும்.

அரிதாய் நண்பர்களை சந்திக்கும் போது 
நிகழ்களைப் பேசவே நேரமில்லை.
நினைவுகளை எவ்விதம் பேச? 

Thursday, August 4, 2011

மழைதலும் நனைதலும்

மென்பனி போர்த்திய மாலையில் 
மெல்லிசை கசிந்த வேளையில் 
அல்லல் மறந்து அலைகளில் 
விளையாடிக் கொண்டிருந்தோம். 

சினமடைந்த மேகங்கள் நம் மகிழ்வைக் 
களவாட மழைச் சாரலை அனுப்பியது.
நான் அணிந்திருந்த மழையங்கியை
அவசரமாய் உனக்கு அணிவித்தேன்.  
நீ வெட்கத்தை அணிந்து "அவ்வளவு 
அன்பா!?" என விழிகளில் வினவினாய்.

என்னால் நகைக்க மட்டுமே  முடிந்தது,
ஆம்,
நனைதலுக்கு பின் வரும் காய்ச்சலில்  
உன் அன்பு தரும் இதத்தை உனக்கு 
கூட கொடுக்காத வஞ்சகனான என்னால்
நகைக்க மட்டுமே முடிந்தது. 
களவாட முயன்று தோற்ற மழையால்
மழை(லை)க்க மட்டுமே முடிந்தது... 

Thursday, June 23, 2011

பொக்கிஷப் பெட்டகம்

வெகு நாட்களுக்குப் பிறகு கிடைத்த 
ஒலிநாடாவில் பதியப்பட்ட தங்கையின்
பள்ளிக்கூட ஆங்கிலப் பாடல்களில் 
மழலை இன்னமும் உள்ளது.

என் பதின்வயது பிறந்த தினங்களை 
பரவசப்படுத்திய பழுப்பேறிய
வாழ்த்தட்டைகளில் நண்பனின் 
பாசம் இன்னமும் உள்ளது.

நேந்து விட்ட சிகை மற்றும் முழியுடன்
நானும், சுற்றி உறவினர்களும் சிரிக்கும்
புகைப்படத்தில் கோவில் திருவிழாவின் 
குதூகலம் இன்னமும் உள்ளது. 

அழகியலும், அனுபவமும் சொல்லும் 
நினைவுச் சின்னங்கள் நிரம்ப உள்ளது
என் பொக்கிஷப் பெட்டகத்தில்.
ஆனால், 
நரைகளின் நாட்களில், நினைவுகளின் 
உணவிற்கு , வரிகள் தேடி மொழிகள் 
தோற்ற வர்ணனைக்கடங்கா உன் ரகசிய 
வெட்கங்களை எவ்விதம் பதிவது???  

Saturday, April 16, 2011

கள்ளத்தனங்கள்

துணி உலர்த்தும் சாக்கில்
மாடிக்கு வந்து ரகசியமாய்
அலைபேசியில் நீ அழைப்பது
எனக்கு மட்டும் தெரியும்.

மிக அருகே உறங்கும் தோழிக்கு
கூட  கேட்காத போர்வைக் கதைகள் 
மைல்கள் கடந்து இருந்தாலும் 
எனக்கு மட்டும் கேட்கும்.

விருந்துண்ணும் மேசையில் பிறர்
கவனம் சிதறுகையில், சிதறிய
பருக்கைக்கு நீ பதறிய காரணம் 
எனக்கு மட்டும் தெரியும்.

திட்டமிட்டு தற்செயலாய் சந்திப்பதும்,
நோட்டமிட்டு கோபியரை நிந்திப்பதும்,
சண்டையிட்டு சபையில் மௌனிப்பதும்,
எனக்கு மட்டும் விளங்கும்.

கண்ணாமூச்சியில் கூட ஒளியத் 
தெரியாத கபடமற்ற பேதையென
வையகம் நம்ப, நீ 'கள்ளி' என்பது
எனக்கு மட்டும் தான் தெரியும்...

Sunday, April 3, 2011

பின்னிருக்கை

முதல் கவிதைக்காய் தமிழய்யா 
பாராட்டியது, கூடைப் பந்து தகராறில்
பாலாவை அடித்தது முதலிய 
அந்நாள் பள்ளிக் கதைகளை
மிதிவண்டிப் பின்னிருக்கையில் 
பயணித்தவாறே  அப்பாவிடம் 
சொல்லியது நெஞ்சிலுண்டு. 
இன்று,
இரு சக்கர வாகனத்தின் அதே 
பின்னிருக்கையில் அப்பா அமர்ந்து 
அம்மாவிடம் சண்டை போட்ட, 
வயதின் அனுபவக் கதைகளை 
என்னிடம் சொல்கிறார். 

கதை கேட்கும் வயதில் நான்
உள்ளேனா என தெரியவில்லை.
ஆனால்,
மடியைத்  தேடும் மழலையாய்
அப்பா மாறிக் கொண்டிருப்பது
மட்டும் தெளிவாய்ப் புரிந்தது...

Thursday, March 31, 2011

வளர்சிதை மாற்றங்கள்

சிறு குண்டூசி கீறலுக்கே ஊரைக் 
கூட்டி கதறி அழுதது உண்டு. 
இன்றோ, 
துரோகக் கத்தி கிழித்து பிணமான 
மனதை கூட மறைத்து சிரிக்கிறேன்.

மனம் வருத்திய சிறு கேலிக்கே அம்மா
மடி தேடி புதைந்தது உண்டு.
இன்றோ,
உயிர் நொறுக்கிய பொய்களைக் கூட
உணர்வில்லாமல் பொறுக்கிறேன்.  

உயிரைக் கொடுக்கும் உறவுகளையும்,
மெய்யன்பை மட்டும் கண்டது உண்டு.
இன்றோ,
பகட்டுச் சமூகத்தில் சுயநல அன்பை
இனம் காண முடியாமல் தவிக்கிறேன்.

வதைகளும் வசந்தமும் கலந்தது தான்
வாழ்வென்பதை காலம் கற்றுத் தந்தது.
காயங்களுக்கெல்லாம் காலம் மருந்து
என வாழ்க்கை சொல்லித் தந்தது...


Monday, February 28, 2011

ஆனந்த சயனம்

கயல்விழியே கண்ணுறங்கு!!
கவின்மகளே கண்ணுறங்கு!!

ஒற்றை தோகை தென்றல் வீச 
ஒயிலுருவே  துயில் உறங்கு!!

மலர்க் கேசத்தை  மயிலிறகு கோத
மறைகளின்  மணியே மகிழ்வுறங்கு!!

சப்த உலகிற்கு தாழிட்டு விட்டு 
யாழிசை வருட  நீயுறங்கு!!

கதை பேசிய களைப்புகள்
கணப் பொழுதில் தொலைய 
கற்பகமே கண்ணுறங்கு!!

மதிமுகம் சுருக்கிய வேதனையை
விறகாக்கி எரித்த வெப்பத்தில் 
குளிர் காய்ந்து சுகமுறங்கு!!

கயல்விழியே கண்ணுறங்கு!!
கவின்மகளே கண்ணுறங்கு!!

Friday, February 11, 2011

யாமறிந்த ஒன்று

சிரிக்க வைக்கும் வித்தை அறிந்த,
நாகரீகச் சபையில் பழகத் தெரிந்த,
வசிய மொழியில் புலமை பெற்ற,
ரசனை மிகுந்த, சாந்தம் கொண்ட,
உனக்கு பிடித்த  யாராகவும்
நான் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால்
உன்னை உயிருக்குள் வைத்து
என்னைப் போல் நேசிக்க
எவராலும் முடியாது,
உன்னாலும் கூட ...

Thursday, February 3, 2011

சந்தித்த வேளையில்

கன்றை ஈன்ற பசுவின் முதல் சொட்டுப் 
பாலின் இனிமையை உன் முதல்
முகமலர்வு  நினைவூட்டியது.

பட பட மொழியும், குறு குறு இமையும்,
தட தட கதைகளுக்கு விறு விறு சேர்த்தன.

உன் அதிர்வுச் சிரிப்பின் ஆனந்ததிற்கு 
வெண் சோளங்கள் வெளிச்சம் பாய்ச்சின.

கனிவுருவக் கண் கொண்டு நீ சொன்ன
'அச்சச்சோ' வில் கூட அழகுச்சம் இருந்தது.

புருவம் உயர்த்தி வியப்பு காட்டிய போது
கருநிற இரட்டை வானவில் தெரிந்தது.

குளிர் கால குளியலின் கடைசிக் குவளை
வெந்நீரைப்  போல் உன் விடை
கொடுப் புன்னகை என்னை வதைத்தது...

 

Thursday, January 27, 2011

சிறுகைச் சித்திரம்

சதுரப் பரப்பின் நடுவே சிறு வனமும்
அங்கே கருநிறப் புற்களும் இருந்தன.
மஞ்சள் கண் பூணை, குட்டி வால்
எலியை துரத்திக் கொண்டிருந்தது.
குட்டை முடி பாப்பா ஒரு குரங்கிற்கு
வழி சொல்லிக் கொண்டிருந்தாள்.
வண்ணக்  கவச முகமூடி வீரர்கள்
பறந்து போரிட்டு கொண்டிருந்தனர்.
தன் படைப்பினைக்  கண்டு குதூகலித்த
ஐந்து வயது பிரம்மாவை சுவரில்
கிறுக்கியதற்காக அம்மா அடித்தாள்.
பொங்கலுக்கு வீட்டை பொலிவாக்குவதாய்
நினைத்து பிகாசாவைப் பகைத்தார்கள். 
தை முடிவதற்குள் அச்சுவர் முழுவதும் 
அடர் வனம் கிளை விட்டிருந்தது...


Tuesday, January 11, 2011

போதைப் புத்தாண்டு

நள்ளிரவிற்காய் வானம் காத்திருந்தது.
நாகரீகம் மேற்கே பார்த்திருந்தது.
மனிதத் தலைகள் சாலை மூடியிருந்தது.
போதை நிலைகள் தலை தாண்டியிருந்தது.

அரைகுறை மங்கையர் ஆட்டத்தில்
தெறிக்கும் இசை செவி கிழித்தது.
உற்சாக வெறியின் வேகத்தில்
உயிர் பலியின் சத்தம் மறைந்தது.

கலாச்சாரமும், மெய் மகிழ்ச்சியும்
மடிந்து மிதி பட்டிருந்தது.
காலி மதுக்குடுவைகள் குவிந்திருந்த
இடத்தில் 'மகாத்மா காந்தி சாலை' 
என்று எழுதியிருந்தது . . .