Monday, March 29, 2010

குற்றம் - நடந்தது என்ன ?

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு
அதிகமானதால் இறந்ததாக 
அந்த தேனீயின்
பிரேதப் பரிசோதனை முடிவில்
தெரிய வந்தது.
ஒரு வேளை  அது
மடியும் முன்பு உன்னை
கடித்திருக்குமோ ???

Saturday, March 20, 2010

புரியாத புன்னகை

அலை பேசியில்
தவறிய அழைப்புகளில்  கூட
உன்  பெயர் பார்த்து 
நான் நகைப்பதை வியக்கும்
எவருக்கும் புரியப் போவதில்லை
ஆனந்தம் என்பது
நீ
என்னுடன் பேசுவதால் மட்டுமல்ல,
பேச வேண்டும் என்று நினைப்பதால்...

Saturday, March 6, 2010

நகர் உலா - திருநெல்வேலி

நான் பிறந்த ஊரினிலே
வசந்தத்திற்கு வாசம் உண்டு
வஞ்சத்திற்கு பஞ்சம் உண்டு
கொஞ்ச நேர கோபம் உண்டு
கொஞ்சுகின்ற தமிழும் உண்டு

அர்ப்பணிப்புள்ள பக்தி உண்டு
அறம் தவறா வீரம் உண்டு
உயிரைக் கொடுக்கும் நட்பு உண்டு
உண்மை பேசும் உறவும் உண்டு

வந்தாரை வரவேற்கும் பண்பாடு உண்டு
வத்ஸரகலா பட்டெடுக்க 'போத்திஸ்' உண்டு
வ.உ.சி மைதானத்தில் விடலைகள்  உண்டு
வற்றாத ஜீவநதி தாமிரபரணியும்  உண்டு

இருட்டுக் கடை அல்வா போல
இனிக்கின்ற இதயங்கள் உண்டு.
குற்றாலச் சாரல் போல
மாசில்லாக் காதல்கள் உண்டு.

ஏட்டுச் சுரைக்காய் போலில்லாமல்
சிந்திக்க வைக்கும் கல்வி உண்டு.
தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்ற
தனிப் பெருமையும் இங்கு உண்டு.

கடல் கடந்து சென்றாலும்
கலாச்சாரம் நெஞ்சில் உண்டு.
அச்சம் மடம் மறந்தாலும்
வெட்கம் இன்னும் மிச்சம் உண்டு.

எங்கள் ஊரில் எல்லாம் உண்டு.
ஆனால்,
அன்பிற்கு மட்டும் அளவே இல்லை...