Sunday, April 11, 2010

ஓர் மின்வெட்டின் போது...

அது ஒரு கோடை கால இரவு,
முன்னறிவிப்பின்றி மின்விளக்குகள் அணைந்து
மின்வெட்டு உலகிற்கு அறிவிக்கப்படுகிறது,
பிரிதலின் போது பாசம் புரிவதைப் போல
மின்சாரத்துடனான நமது பந்தம் உணரப்படுகிறது.

அலுவலகப் பிரச்சனையை அலசியவாறே
மொட்டை மாடியில் தென்றலை
ரசிக்கிறார்கள் அப்பாக்கள்.

வீட்டுத் திண்ணையின் மகளிர் மாநாட்டில்
தொடர் நாடகங்களின் நிலவரங்களை
விவாதிக்கிறார்கள் அம்மாக்கள்.

"இங்கே மின்வெட்டு, அங்கே?" என
கல்லூரி நண்பனை குறுந்தகவலில்
வினவுகிறார்கள் இளம்பெண்கள்.

விறுவிறுப்பான கிரிக்கெட் ஆட்டத்தை பார்க்க
முடியாததால் மின்சார வாரியத்தை
சபிக்கிறார்கள் இளைஞர்கள்.

மருமகளை மனதுக்குள் திட்டியவாறே
தொட்டிலில் அழும் பேரக்குழந்தையை
தாலாட்டுகிறார்கள் பாட்டிகள்.

நடுவயது கதைகளை நண்பர்களுடன்
பகிர்ந்தவாறே பக்கத்து பூங்காவில்
நடக்கிறார்கள் தாத்தாக்கள்.

வீட்டுப் பாடத்திலிருந்து தப்பிய
மகிழ்ச்சியில் உற்சாகத்துடன்
விளையாடுகிறார்கள் குழந்தைகள்.

இன்பச் சுற்றுலா முடிந்து திரும்புவது போல
எரியும் விளக்குகளில் மீண்டும்
தொடங்குகிறது நம் மின்சார வாழ்வு. 

Sunday, April 4, 2010

உறங்க மறந்த இரவுகள்

பத்தரை மணிக்குள் பாதி
நித்திரையைக் கடந்தது ஒரு காலம்.
இப்போதெல்லாம் 
உலகத்தை எழுப்பும் சேவல் தான்
என்னை தூங்க வைக்கிறது.

உன் இதழ் கடந்து வந்ததால் அலுத்துப் போன
நகைச்சுவைக்கும் சிரிப்பு வருகிறது.
என் வாழ்க்கைக் கதைகள் கூட நீ
விரும்பி கேட்பதால் வரலாறாய்த் தெரிகிறது.

இந்தியப் பொருளாதரத்தைக் கூட
இவ்வளவு நேரம் ஆராய்ந்திருக்க மாட்டார்கள்.
ஆனால் என்ன பேசப் போகிறோம்  என்றே 
நள்ளிரவில் தான் நாம் முடிவெடுக்கிறோம்.

ராட்டினத்தின் உச்சியை அடைந்ததும்
மின்சாரத்தை நிறுத்துவது போல,
ஒவ்வொரு முப்பது நிமிடங்களிலும்
இணைப்பைத் துண்டிக்கிறது
இங்கிதம் தெரியாத ' வோடஃபோன் '.

விரைவாக விடிந்ததால் இயற்கை சபிக்கப்படுகிறது
தொலைத்த உறக்கம் அலுவலகத்தில் துயிலப்படுகிறது.