Sunday, January 17, 2010

சந்தோஷப் பொய்கள்

 அடைமழையின் பிடிவாதத்துடன் நீ
அழகாக உரையாடுவாய்,
ஆனந்தப் பரவசத்தில்
அடங்கிப் போகும் என் வார்த்தைகள்.

உன் மதிநூட்ப தர்க்கங்கள்
மழை நேர தேநீர் ரசனை,
மழலை கொஞ்சும் உன் கோபம்
குளிர் இரவின் கம்பளியின் வெப்பம்,

உன்னுடன் உணவருந்திய அன்று
பிறவிப்பயன்  அடைந்தன பதார்த்தங்கள்,
நொடிகள் யுகங்களாய்  உன் பிரிவில்
மாறிப் போயின யதார்த்தங்கள்.

நீ குழலில் சூட  மறுத்ததில்
மேகங்கள் எல்லாம் கோபத்தில்,
உன்னை மகிழ்வித்த மகிழ்ச்சியில்
பொய்கள் எல்லாம் சொர்க்கத்தில்.

இன்னும் தீர்ந்த பாடில்லை
குயில் உனக்கு
பின்னணிக்குரல்  கொடுக்கிறதா
என்ற சந்தேகமும்
உன் மீது நான் கொண்ட
பேரன்பும்..

நடமாடும் நித்திலமே,
இன்பத்திற்கும் துன்பத்திற்கும்
ஓர் எல்லை உண்டு.
நீ
எல்லை தாண்டிய பயங்கரவாதி...

Saturday, January 2, 2010

நள்ளிரவு லட்சியம்

அன்று, பனி பொழியும் இரவு
பாதி தூரம் பயணித்திருக்கும்,
சார்பியல் கொள்கையின் நீண்ட இரவில்
விழித்த இமைகளுடன்
எரிமலையின் மண்புழுவைப் போல
பசித்த வயிறுடன்
நெளிந்து கொண்டிருக்கிறேன்.
அழுவதற்கான கண்ணீரும்
தண்ணீரைப் போல வற்றி விட்டது.
புழுதி மண்டிய நகரச் சாலையின்
சாக்கடை விளிம்பில்
மெலிந்த தேகத்துடன்,
ரணமான  கால்களுடன்,
அலைந்து கொண்டிருக்கிறேன்
உலகின் மகத்துவமான பசியைப்
போக்கும் உணவைத் தேடி...
மூன்று வேளை வயிராற உண்ணும்
உங்களுக்கு என் தேடல்
சாதாரணமாகத் தெரியலாம்
ஆனால்
எனக்கோ நள்ளிரவு லட்சியம்