Thursday, May 27, 2010

ஏதேன் தோட்டத்து கதை

ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நிச்சயதார்த்தம்
அடுத்த மாத இறுதியில் சுபமுகூர்த்தம்
ஆனந்த வைபோகத்தின் ஆரம்ப விதை
இது சந்தோஷக்காலத்து நிகழ்வுகளின் கதை.

தமிழில் தொடங்கி செப்பு மொழிகள் பத்தாமல்
அலுவலகத்தில் 'ஜாவா'விலும்  ஏவாள் பெயர்
எழுதிப் பார்த்த வழக்கில்  மேலாளரிடம்
அசட்டுப்  புன்னகை புரிகிறான் ஆதாம். 

மணநாளில் அணிய வேண்டிய நகை,
புடவை, அலங்காரங்களைப் பற்றி
அளவில்லா முனைப்புடன் சானியா மிர்சா
போல சிந்தனை செய்கிறாள் ஏவாள்.

"மடிவதாயினும் மது, மாமிசம் உண்பேன்" என்று
குடிகாரர்கள் சபையில் உறுதி  பூண்ட  ஆதாம்,
நண்பன் கொடுத்த  மது  விருந்தில் கூட ஏவாள்
சைவம் என்பதால் ஆப்பிள் மட்டுமே தின்கிறான்.

நுண்ணறிவுடனும், நினைவுத்திறனுடனும்
இருந்த ஏவாள் கொடியில் காயும் துணியுடன்
தனியாக நகைத்து பேசுவதைப் பார்த்து
அச்சமடைகிறார்கள் ஏவாளின் அறைத்தோழிகள்.

வங்கியில் சேமித்த பணம் அலைபேசி கட்டணத்திற்கே
பத்தவில்லை என்பதால் திருமணத்திற்கு
கடன் வாங்க கலாநிதி மாறன் வீட்டில் காத்திருக்கிறார்
இருவரையும் படைத்த அப்பாவி கடவுள்...

Wednesday, May 12, 2010

பெண் என்பவள் என்னவள்

ஆள் அரவமில்லா  சாலையைக்
கடக்கையிலே தூரத்து ஒலிப்பான்
சத்தத்திற்கு நீ என் கைகளை இறுகப்
பற்றியதன் பெயர் 'அச்சம்' என்றால், 

பத்து நிமிடமாய் பதில் வராத
குறுந்தகவலுக்காய் பல நூறு முறை
என்னை மனதுக்குள் திட்டிய
பகைமையின் பெயர் "மடைமை" என்றால்,

அணிந்த புதுப் புடவையை என்னிடம்
காட்டி 'அழகாய் உள்ளதா?' எனக்கேட்டு
கன்னம் சிவக்க கண் பார்க்க
தவிர்ப்பதன் பெயர் "நாணம்" என்றால்,
 
விரக்தியின் வலி விழியைக்
கடப்பதற்குள் அன்னையைப்
போல் அரவணைக்கும்
மென்மையின் பெயர் 'பயிர்ப்பு' என்றால்,

வேதங்கள் கூறும் பெண்ணும்
உன்னைப் போல் இனியவளாக
இருந்திருக்கக் கூடும் என்றே
நம்பத் தோன்றுகிறது...

Monday, May 10, 2010

ஒரு 'டூக்காவும்' ஒரு 'பழமும்'

அன்பின் உச்சம் கோபம் என்பதால்
அம்மா அப்பாவிற்குள் சண்டைகள் புதிதல்ல.

வேதனையோடு விடிகிறது அந்த பொழுது.
எதிர்பார்ப்புகள் தந்த ஏமாற்றங்கள்
கடும் சொற்களாய் வெடிக்கிறது,
வாக்குவாதங்களின் தீவிரத்தில்
இருவருமே சளைக்கவில்லை.
கோபங்கள் கொட்டிய பின்பு
மௌனங்கள் மட்டுமே மிச்சம்.
விதைத்தவர்கள் மோதலில்
வெப்பம்  என்னைத்  தாக்குகிறது.
விவரம் அறியாத மருத்துவர் அதை
கடுங்குளிர்க் காய்ச்சல் என்கிறார்.
என்னைப் பார்த்து  அழும் அம்மாவை
அன்பாக தேற்றுகிறார் அப்பா,
சற்று முன்பு நடந்த யுத்தம்
சத்தமில்லாமல் முகவரி தொலைக்கிறது.
இது தான் இல்லறம் என்பது
விளங்காமல் விழிக்கிறேன் நான். 

மன்னிப்பின்றி மடியும் சண்டைகள்
புரிவதில் அம்மா அப்பாவும்
சிறு பிள்ளைகள் தான் போல!