Sunday, December 29, 2013

வனம் மாறிய தேவதை

இப்போதெல்லாம், 
களைப்போடு வரும் அப்பாவின் கால்களை
யாரும் மடியில் அமர்த்தி பிடித்து விடுவதில்லை.

சிகை வாரி விடுகையில் சிக்கிக் கொள்ளும் கூந்தலுக்காய்
அம்மாவை யாரும் வசை பாடுவதில்லை.

சிறுநரை தாடியுடன் அலுவலுக்குச் செல்லும் சித்தப்பாவை
யாரும் சவரம் செய்யச் சொல்லி கண்டிப்பதில்லை.

தம்பிகளின் தேன் மிட்டாய் பங்கீடு
வழக்குகளுக்கு யாரும் தீர்ப்பு சொல்வதில்லை.

முகம் பார்க்கும் கண்ணாடியின் ஓரங்களில்
ஸ்டிக்கர் பொட்டுக்கள் சிரிப்பதில்லை,

அளவில்லா ஆனந்தத்தைப் பிரதிபலிக்கும்
அதிர்வெண்ணில் கொலுசுகள் ஒலிப்பதில்லை,

வாசலின் ரங்கோலிகள் வண்ணம் தொலைத்து
எட்டுப்புள்ளி கோலமாகி  விட்டது.

கூட்டமாய் அனுபவிக்கும்
தனிமை ஒன்று  உருவாகி சுட்டது.

மொட்டை மாடியில் தோழியைக் காணாது தேயும் அம்புலிக்கு
அவள் முகவரி மாறிய கதையை எப்படிச் சொல்வது?

மகிழ்ச்சிப் பொட்டலத்தோடு  புகுந்த வீட்டிற்குச் சென்ற 
எங்கள் தேவதையின் பிரிவை எப்படி வெல்வது !!!