Sunday, May 4, 2014

உறவுகளும் பிரிவுகளும்

தாய் மண்ணைத் தாண்டிராத என்னை
வெளியூர்க் கல்லூரி விடுதியில்
அப்பா விட்டுச் சென்ற போது
அழுததாய் ஞாபகம்,
வலித்ததாய் ஞாபகமில்லை.

பால்யம் தொடங்கி பருவம் வரை
என்றுமே இணைபிரியா உயிர்த்தோழன்
பணி நிமித்தமாய் பிரிந்து செல்கையில்
மகிழ்வோடு வாழ்த்தியதாய் ஞாபகம்.

ஒருமித்த ரசனையும் சிந்தனையும் கொண்ட
ரயில் சிநேகிதி பயணம் முடிந்து
பிரிகையில் புன்னகைத்ததாய் ஞாபகம்.

தவிர்க்கப்பட்ட அன்பினாலோ,
வேறுபட்ட கருத்தினாலோ,
வெறுக்கப்பட்ட குணத்தினாலோ,
மனம் கசந்து பிரிந்த பிறகு
தற்செயல் சந்திப்பின் போது கூட
சம்பிரதாயப்  புன்னகை மறுக்கப்படும்
தருணத்தில் விளங்கியது,
பிரிவை விட பெரும் ரணம்
பிரிவின் காரணம் என்பது... 

Tuesday, April 1, 2014

முட்டாள்கள் தினம்

மெத்தப் பிரயத்தனப்பட்டு கண்ட பழதான
தந்திரம் கொண்டு என்னை ஏமாற்ற முயல்கிறாய்,

மத்தம் மதியுடைக்கும் பிணி முதிர்வின்
பிரதி போல நானும் ஏமாந்து நடிக்கிறேன்.

சத்த நாடிகளின் சந்தோஷப் பாய்ச்சலின்
சங்கீதத்திற்கேற்ப எள்ளி நகையாடுகிறாய். 

மொத்த ரம்மியமும் பருகிக் கொண்டே
பொய்க் கோபம் காட்டி முறைக்கிறேன்.

நித்தம் நிலை மாறும் பெருவெளியைப் போல்
குறுநகைத்து பயந்து குறும்பு காட்டுகிறாய்.

பித்தம் பிரவாகமுடைத்த பேதைகளாய்
நாம் களித்திருக்கும் தருணத்திலே,
ஒத்த மனங்களின் தந்திரம் புரியாமல்
முட்டாளாகிறது  முட்டாள்கள் தினம்.

Sunday, February 23, 2014

ஒரு தேவதையும் சில பொய்களும்

தேவதை வெண்ணிற ஆடையில் வருமென்பது பொய்,
அன்று பச்சை நிற சுடிதார் அணிந்திருந்தது.

தேவதை ரெக்கை கொண்டு பறக்குமென்பது பொய்,
அன்று அரசுப் பேருந்திலும் சென்றது.

தேவதையின் உணவு அமிர்தமென்பது பொய்,
அன்று குல்ஃபி ஐஸ்கிரீமும் உண்டது.

தேவதைக்கு முக்காலமும் தெரியுமென்பது பொய்,
அன்று கைக்கடிகாரத்தில் தான் நேரம் பார்த்தது.

தேவதை ஆதித்தமிழில் பேசுமென்பது பொய்,
அன்று ஆங்கிலம் கலந்த தமிழிலும் பேசியது.

தேவதை காவல் தெய்வம் என்பது பொய்,
அன்று  மைவிழிகளால் என்னை வதைத்துக் கொண்டிருந்தது.

தேவதை வரங்கள் மட்டுமே தரும் என்பது பொய்,
அன்று ஒயில் நினைத்து துயில் தொலைக்கும் சாபம் தந்தது.

தேவதை அழகாய் இருக்குமென்பதும் பொய் தான்.
அன்று பேரழகாய் இருந்தது !!!