Monday, February 28, 2011

ஆனந்த சயனம்

கயல்விழியே கண்ணுறங்கு!!
கவின்மகளே கண்ணுறங்கு!!

ஒற்றை தோகை தென்றல் வீச 
ஒயிலுருவே  துயில் உறங்கு!!

மலர்க் கேசத்தை  மயிலிறகு கோத
மறைகளின்  மணியே மகிழ்வுறங்கு!!

சப்த உலகிற்கு தாழிட்டு விட்டு 
யாழிசை வருட  நீயுறங்கு!!

கதை பேசிய களைப்புகள்
கணப் பொழுதில் தொலைய 
கற்பகமே கண்ணுறங்கு!!

மதிமுகம் சுருக்கிய வேதனையை
விறகாக்கி எரித்த வெப்பத்தில் 
குளிர் காய்ந்து சுகமுறங்கு!!

கயல்விழியே கண்ணுறங்கு!!
கவின்மகளே கண்ணுறங்கு!!

Friday, February 11, 2011

யாமறிந்த ஒன்று

சிரிக்க வைக்கும் வித்தை அறிந்த,
நாகரீகச் சபையில் பழகத் தெரிந்த,
வசிய மொழியில் புலமை பெற்ற,
ரசனை மிகுந்த, சாந்தம் கொண்ட,
உனக்கு பிடித்த  யாராகவும்
நான் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால்
உன்னை உயிருக்குள் வைத்து
என்னைப் போல் நேசிக்க
எவராலும் முடியாது,
உன்னாலும் கூட ...

Thursday, February 3, 2011

சந்தித்த வேளையில்

கன்றை ஈன்ற பசுவின் முதல் சொட்டுப் 
பாலின் இனிமையை உன் முதல்
முகமலர்வு  நினைவூட்டியது.

பட பட மொழியும், குறு குறு இமையும்,
தட தட கதைகளுக்கு விறு விறு சேர்த்தன.

உன் அதிர்வுச் சிரிப்பின் ஆனந்ததிற்கு 
வெண் சோளங்கள் வெளிச்சம் பாய்ச்சின.

கனிவுருவக் கண் கொண்டு நீ சொன்ன
'அச்சச்சோ' வில் கூட அழகுச்சம் இருந்தது.

புருவம் உயர்த்தி வியப்பு காட்டிய போது
கருநிற இரட்டை வானவில் தெரிந்தது.

குளிர் கால குளியலின் கடைசிக் குவளை
வெந்நீரைப்  போல் உன் விடை
கொடுப் புன்னகை என்னை வதைத்தது...