Saturday, April 16, 2011

கள்ளத்தனங்கள்

துணி உலர்த்தும் சாக்கில்
மாடிக்கு வந்து ரகசியமாய்
அலைபேசியில் நீ அழைப்பது
எனக்கு மட்டும் தெரியும்.

மிக அருகே உறங்கும் தோழிக்கு
கூட  கேட்காத போர்வைக் கதைகள் 
மைல்கள் கடந்து இருந்தாலும் 
எனக்கு மட்டும் கேட்கும்.

விருந்துண்ணும் மேசையில் பிறர்
கவனம் சிதறுகையில், சிதறிய
பருக்கைக்கு நீ பதறிய காரணம் 
எனக்கு மட்டும் தெரியும்.

திட்டமிட்டு தற்செயலாய் சந்திப்பதும்,
நோட்டமிட்டு கோபியரை நிந்திப்பதும்,
சண்டையிட்டு சபையில் மௌனிப்பதும்,
எனக்கு மட்டும் விளங்கும்.

கண்ணாமூச்சியில் கூட ஒளியத் 
தெரியாத கபடமற்ற பேதையென
வையகம் நம்ப, நீ 'கள்ளி' என்பது
எனக்கு மட்டும் தான் தெரியும்...

Sunday, April 3, 2011

பின்னிருக்கை

முதல் கவிதைக்காய் தமிழய்யா 
பாராட்டியது, கூடைப் பந்து தகராறில்
பாலாவை அடித்தது முதலிய 
அந்நாள் பள்ளிக் கதைகளை
மிதிவண்டிப் பின்னிருக்கையில் 
பயணித்தவாறே  அப்பாவிடம் 
சொல்லியது நெஞ்சிலுண்டு. 
இன்று,
இரு சக்கர வாகனத்தின் அதே 
பின்னிருக்கையில் அப்பா அமர்ந்து 
அம்மாவிடம் சண்டை போட்ட, 
வயதின் அனுபவக் கதைகளை 
என்னிடம் சொல்கிறார். 

கதை கேட்கும் வயதில் நான்
உள்ளேனா என தெரியவில்லை.
ஆனால்,
மடியைத்  தேடும் மழலையாய்
அப்பா மாறிக் கொண்டிருப்பது
மட்டும் தெளிவாய்ப் புரிந்தது...