Thursday, January 27, 2011

சிறுகைச் சித்திரம்

சதுரப் பரப்பின் நடுவே சிறு வனமும்
அங்கே கருநிறப் புற்களும் இருந்தன.
மஞ்சள் கண் பூணை, குட்டி வால்
எலியை துரத்திக் கொண்டிருந்தது.
குட்டை முடி பாப்பா ஒரு குரங்கிற்கு
வழி சொல்லிக் கொண்டிருந்தாள்.
வண்ணக்  கவச முகமூடி வீரர்கள்
பறந்து போரிட்டு கொண்டிருந்தனர்.
தன் படைப்பினைக்  கண்டு குதூகலித்த
ஐந்து வயது பிரம்மாவை சுவரில்
கிறுக்கியதற்காக அம்மா அடித்தாள்.
பொங்கலுக்கு வீட்டை பொலிவாக்குவதாய்
நினைத்து பிகாசாவைப் பகைத்தார்கள். 
தை முடிவதற்குள் அச்சுவர் முழுவதும் 
அடர் வனம் கிளை விட்டிருந்தது...


Tuesday, January 11, 2011

போதைப் புத்தாண்டு

நள்ளிரவிற்காய் வானம் காத்திருந்தது.
நாகரீகம் மேற்கே பார்த்திருந்தது.
மனிதத் தலைகள் சாலை மூடியிருந்தது.
போதை நிலைகள் தலை தாண்டியிருந்தது.

அரைகுறை மங்கையர் ஆட்டத்தில்
தெறிக்கும் இசை செவி கிழித்தது.
உற்சாக வெறியின் வேகத்தில்
உயிர் பலியின் சத்தம் மறைந்தது.

கலாச்சாரமும், மெய் மகிழ்ச்சியும்
மடிந்து மிதி பட்டிருந்தது.
காலி மதுக்குடுவைகள் குவிந்திருந்த
இடத்தில் 'மகாத்மா காந்தி சாலை' 
என்று எழுதியிருந்தது . . .

Tuesday, December 14, 2010

கடவுள் ஏன் கடுப்பானார்?

நகர்வலம் வந்த கடவுளும் நானும்
நலம் விசாரித்துக் கொண்டோம் .  
அவரது படைப்பில் நான் வெகுவாக
ரசித்தவை பற்றி சொல்லச் சொன்னார்.

உறை மீளும் வாளின் ஓலியைப் போன்று  நீ
"ம்ம்க்கும்ம்"  சொல்வது பிடிக்கும் என்றேன்.
மேற்கத்திய உடையிலும் நெற்றியில் சிரிக்கும்
மெலிதான பொட்டினை ரசிப்பேன் என்றேன்.

அரக்கு பட்டுச் சேலையில் நான் பார்த்த
முதல் வெட்கம் கவிதை என்றேன்.
நண்பர்கள் சுற்றியிருக்க எனக்கு மட்டும்
புரியும் விழிமொழிகள் வேதம் என்றேன்.

அத்தி பூக்கும் தினங்களில் குழலில் நீ சூடும்
மௌவலின் மணம் மதுரம் என்றேன்.
உயிருருவும் குறுநகையால் என்னைக் 
களவாடிய தருணங்கள் சொர்க்கம் என்றேன்.

பெருங்காவியத்தின் முதல் பத்தியிலே 
இடைமறித்த  கடவுள்  "நீ  கொடுத்து
வைத்தவன்!!!" என்றார். அவர்
கண்களில் பொறாமை இருந்தது...

Sunday, December 5, 2010

தலை விதி

அக்கறை இல்லையென நினைத்தாயா?
என் அன்பு  குறைவென வெறுத்தாயா?
தவணையில் உயிர் பிரிவது போல்
தினம்தினம் உதிர்ந்து சென்றாயே!

விஞ்ஞானம் உன்னை மீட்டாலும்
விலை கொடுக்க முடியவில்லை.       
எதிரொளிப்பு தொல்லைகளால்
வெயிலில் செல்ல முடியவில்லை.

உன்னை வைதல் சொல்லாய்
பயன்படுத்தும் முடிவேந்தர்க்கு
எங்கே புரியப் போகிறது
பிறை நிலவு தலையுடன்
பெண் தேடும் பாடும்,
கண்ணாடி பார்க்கையில்
கவரிமானின் ஏளனச் சிரிப்பும்...

Tuesday, November 30, 2010

கீழ்வானமும் என் வானமும்

அகல் விளக்குகளின்  திருநாளன்று 
கதிரவன் கடல் கரையும் மாலையில் 
மகிழ்ச்சித் தோரண வீதியில் நீயும்,
நானும் நடந்து கொண்டிருந்தோம்.

பனிவாடை சாமரம் வீசிய
மனையொன்றின் முற்றத்தில்,
பட்டாடை உடுத்திய சிறுமி ஒருத்தி
எட்டுப் புள்ளி கோலமிட்டு அதில்
எழில்மிகு வண்ணமிட்டு அதன் கீழே
"கார்த்தி" என எழுதிக்  கொண்டிருந்தாள்.

"கார்த்தி பாப்பா, நீ போட்ட கோலம்
ரொம்ப அழகா இருக்கு!!!" என்று
மழலை மொழியில் கூறி, உன்
சாதூர்யத்திற்கு நீயே சபாஷ் சொன்னாய்.
நடப்பது புரியாமல் விழித்தவாறே சிறுமி
"கார்த்திகை தீபம்" என எழுதி முடித்தாள்.

அழகியலின் உச்சத்தை உள்ளுக்குள் ரசித்து
கேலி செய்த என் கண்களைத் தவிர்க்க
நாணத்தில் நிலம் நோக்கிய உன்னைப் 
போல் அந்தி வானமும் சிவந்திருந்தது...

Monday, November 15, 2010

நேசபுரத்து தேவதை

நெல்லையப்பர் கோவிலில்
அர்ச்சனை செய்த விபூதி, 
ராகுகால பூஜையில் பெற்ற 
ஆயிரத்தம்மன் குங்குமம்,
சனி தோறும் விரதமிருந்த 
ஆஞ்சநேயர் செந்தூரம்,
என ஒவ்வொன்றாய், விடுமுறை
முடிந்து திரும்பிய தினத்தில்,
மென்சோகம் மறைத்து நகைத்த
அம்மா என் நெற்றியில் பூசிய போது
அவளின் பாசம் போல் அவைகளும்
பொன்னிறமாய் மாறியிருந்தன...

Wednesday, November 3, 2010

ஏனோ என் கணவா?

மெய் வருத்தி செய்த பணி
மெச்சப்படாமல் போகையில்
மென்மையாய் சிரித்தீர்கள்.

மதிப்புமிகு வாடிக்கையாளரின்
வார்த்தை தடிக்கையில்
பணிவாய்ப் பொறுத்தீர்கள்.

தவறிழைத்த  ஊழியனைத் 
திருத்துகையில் கூட தங்கள்
தன்மை மாறவில்லை.

ஆனால்,
என் காதல் குழைத்த சாம்பாரில்
காரம் குறைகையில் மட்டும்
கடிவதேனோ?

Saturday, October 30, 2010

இசையோடிணைந்த வாழ்வு

விடிகாலை பூசாரி, வியர்வை சிந்தும் ஆசாரி,
எல்லைப் போராளி, நள்ளிரவு உழைப்பாளி ,    
சிகையழகு கலைஞன், கணினி இளைஞன்,
என எல்லோர் வாழ்விலும்
பக்திப் பாடலாக, பண்பலை கீதமாக
பதிவுத் தகடாக இசை
நீக்கமற நிறைந்துள்ளது.

என்  இயந்திர வாழ்விலும்
இசைப்பஞ்சம் வரப் போவதில்லை, 
என்னிடத்தில்
'அப்புறம்' மற்றும் அலைபேசியும்,
உன்னிடத்தில்
அந்நாள் சம்பவக் கதைகளும் 
இருக்கும் வரையில்...

Wednesday, October 20, 2010

ஒற்றைப் பனை

அப்பாவின் மடியில் அமர
சண்டையிடும் குட்டித் தங்கை,
அளவில்லா செல்லம் தந்து
அரவணைக்கும் அன்பு அண்ணன்,
சீருடை அணிவித்து சின்னதாய்
கண்டிக்கும் அழகு அக்கா,
பஞ்சு மிட்டாய் பஞ்சாயத்திற்காய் 
கிள்ளி வைக்கும் குறும்பு தம்பி,
என எவருமில்லா தனி வீட்டில்
செப்புச் சாமான்கள் மற்றும்
பொம்மைகளுடன் எதிர் வீட்டைப் 
பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தாள்
ஒற்றையாய் பிறந்த ஷ்ரேயா குட்டி..

Sunday, October 3, 2010

வலியது உன் விழியது

தரையில் படுக்க வைத்து
நெற்றிப்  பொட்டில் தண்ணீரை
சொட்டு சொட்டாய் ஊற்றுதல் ,
உணவு உறக்கம் மறுத்தல்,
கழுவேற்றுதல் என விதவிதமாய்
தண்டனைகள் பல உண்டு. 
ஆனால், 
கருட புராணம் கூட
கண்டிராத சித்ரவதை,
உன் கயல்விழிகளின்
நடன உற்சவத்தின் போது
உன் செவ்வாய் கவிதைகளை
கவனிக்கச் சொல்வது...