Saturday, December 26, 2009

பிரிவோம் சந்திப்போம்

காக்கைக் கூட்டம் நாங்கள் என்பதை
காலை உணவில் கண்டு கொண்டோம்.
காலைக் குளியல் கனவு என்பதை
காலப் போக்கில் புரிந்து கொண்டோம்.


திருநீறு மணக்கும் நெற்றியை
தேர்வு தோறும் காணலாம்.
நாமம் சுமக்கும் மகிழ்ச்சிதனை
தேர்வின் முடிவில் அறியலாம்.


அறிவைப் பகிரும் ஆர்வத்தை விட
அறியாமையைப் பகிரும் இன்பம் மிகுதி.
அன்று வென்றோம் மெல்லிய இதயம்.
என்று பார்த்தோம் சூரிய உதயம்?


உறக்கமில்லா இரவுகளிலும் சோம்பல் இல்லை
மதிய வகுப்புகளில் விழித்ததே இல்லை.
அர்த்தமில்லா அரட்டைகள் சலித்ததே இல்லை.
அழகின் தரிசனங்கள் துறந்ததே இல்லை.


நான்கு பேர் அடித்த போதும் வலித்ததில்லை
நண்பன் சொன்ன வார்த்தைக்காக அழுததுண்டு.
ஈசலைப் போலவே சண்டைகளும் கோபங்களும்
அற்ப ஆயுளில் மடிந்து மறக்கப்பட்டது.


நிராகரிப்புகள் வலியைத் தந்தாலும்
விசாரிப்புகள் வசந்தம் தந்தன.
நாங்கள் சாயத் தோள்கள் இருந்ததால்
வாள்கள் வீசப் பயந்தன தோல்விகள்.

வாழ்க்கை என்பது
மகிழ்ச்சித் தருணங்களின் தோரணம்.
நெஞ்சில் தித்திக்கும் கல்லூரி நினைவுகளுடன்
பிரிவோம் சந்திப்போம் . . .


குறிப்பு : உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை


போட்டியில் பங்கேற்க்க விரும்புவோருக்கான விவரங்கள் மற்றும் போட்டியில் பங்கேற்கும் அன்பர்களின் கவிதைகள்...