Saturday, November 2, 2019

தேவதை நீ எனக்கு

தேர்ந்தெடுத்த காய் கறி கொண்டு 
ஒரு சிட்டிகை அன்பு கலந்து
நீ படைக்கும் உணவுகள் 
அமிர்தத்தின் அடுத்த கட்டம்.
ஆனால்,
அந்த உப்புமா மற்றும் சில 
பெயர் வைக்க முடியாத 
பதார்த்தங்களில் கூட 
அறுசுவை அரசியடி நீ எனக்கு !!!


பிறர் துன்பம் காண கலங்குவதிலும்,
பச்சாதாப நுண்ணறிவிலும்,
பாரபட்சமில்லா பரிவிலும்,
அன்பிற்கினியாள் நீ.
ஆனால்,
குறை சொல்லா புறணிகளிலும்,
மடை இல்லா முன் கோபத்திலும்,
இடை நில்லா வசவுகளிலும் கூட 
செல்லமடி நீ எனக்கு !!!


அரக்கு பட்டு புடவையில்
நெற்றிச்சுட்டி பொலிவில்
ஜிமிக்கி ஜொலி ஜொலிப்பில்
மைவிழியாள் உன் சிரிப்பு   
instagram-ல் இதயங்களை அள்ளும்.
ஆனால்,
புகை படர்ந்த nighty-யிலும், 
துயில் கலைத்த சிகையிலும்,
சோர்வு களைத்த நகைப்பிலும் கூட 
தேவதை நீ எனக்கு !!!


Sunday, May 4, 2014

உறவுகளும் பிரிவுகளும்

தாய் மண்ணைத் தாண்டிராத என்னை
வெளியூர்க் கல்லூரி விடுதியில்
அப்பா விட்டுச் சென்ற போது
அழுததாய் ஞாபகம்,
வலித்ததாய் ஞாபகமில்லை.

பால்யம் தொடங்கி பருவம் வரை
என்றுமே இணைபிரியா உயிர்த்தோழன்
பணி நிமித்தமாய் பிரிந்து செல்கையில்
மகிழ்வோடு வாழ்த்தியதாய் ஞாபகம்.

ஒருமித்த ரசனையும் சிந்தனையும் கொண்ட
ரயில் சிநேகிதி பயணம் முடிந்து
பிரிகையில் புன்னகைத்ததாய் ஞாபகம்.

தவிர்க்கப்பட்ட அன்பினாலோ,
வேறுபட்ட கருத்தினாலோ,
வெறுக்கப்பட்ட குணத்தினாலோ,
மனம் கசந்து பிரிந்த பிறகு
தற்செயல் சந்திப்பின் போது கூட
சம்பிரதாயப்  புன்னகை மறுக்கப்படும்
தருணத்தில் விளங்கியது,
பிரிவை விட பெரும் ரணம்
பிரிவின் காரணம் என்பது... 

Tuesday, April 1, 2014

முட்டாள்கள் தினம்

மெத்தப் பிரயத்தனப்பட்டு கண்ட பழதான
தந்திரம் கொண்டு என்னை ஏமாற்ற முயல்கிறாய்,

மத்தம் மதியுடைக்கும் பிணி முதிர்வின்
பிரதி போல நானும் ஏமாந்து நடிக்கிறேன்.

சத்த நாடிகளின் சந்தோஷப் பாய்ச்சலின்
சங்கீதத்திற்கேற்ப எள்ளி நகையாடுகிறாய். 

மொத்த ரம்மியமும் பருகிக் கொண்டே
பொய்க் கோபம் காட்டி முறைக்கிறேன்.

நித்தம் நிலை மாறும் பெருவெளியைப் போல்
குறுநகைத்து பயந்து குறும்பு காட்டுகிறாய்.

பித்தம் பிரவாகமுடைத்த பேதைகளாய்
நாம் களித்திருக்கும் தருணத்திலே,
ஒத்த மனங்களின் தந்திரம் புரியாமல்
முட்டாளாகிறது  முட்டாள்கள் தினம்.

Sunday, February 23, 2014

ஒரு தேவதையும் சில பொய்களும்

தேவதை வெண்ணிற ஆடையில் வருமென்பது பொய்,
அன்று பச்சை நிற சுடிதார் அணிந்திருந்தது.

தேவதை ரெக்கை கொண்டு பறக்குமென்பது பொய்,
அன்று அரசுப் பேருந்திலும் சென்றது.

தேவதையின் உணவு அமிர்தமென்பது பொய்,
அன்று குல்ஃபி ஐஸ்கிரீமும் உண்டது.

தேவதைக்கு முக்காலமும் தெரியுமென்பது பொய்,
அன்று கைக்கடிகாரத்தில் தான் நேரம் பார்த்தது.

தேவதை ஆதித்தமிழில் பேசுமென்பது பொய்,
அன்று ஆங்கிலம் கலந்த தமிழிலும் பேசியது.

தேவதை காவல் தெய்வம் என்பது பொய்,
அன்று  மைவிழிகளால் என்னை வதைத்துக் கொண்டிருந்தது.

தேவதை வரங்கள் மட்டுமே தரும் என்பது பொய்,
அன்று ஒயில் நினைத்து துயில் தொலைக்கும் சாபம் தந்தது.

தேவதை அழகாய் இருக்குமென்பதும் பொய் தான்.
அன்று பேரழகாய் இருந்தது !!! 

Sunday, December 29, 2013

வனம் மாறிய தேவதை

இப்போதெல்லாம், 
களைப்போடு வரும் அப்பாவின் கால்களை
யாரும் மடியில் அமர்த்தி பிடித்து விடுவதில்லை.

சிகை வாரி விடுகையில் சிக்கிக் கொள்ளும் கூந்தலுக்காய்
அம்மாவை யாரும் வசை பாடுவதில்லை.

சிறுநரை தாடியுடன் அலுவலுக்குச் செல்லும் சித்தப்பாவை
யாரும் சவரம் செய்யச் சொல்லி கண்டிப்பதில்லை.

தம்பிகளின் தேன் மிட்டாய் பங்கீடு
வழக்குகளுக்கு யாரும் தீர்ப்பு சொல்வதில்லை.

முகம் பார்க்கும் கண்ணாடியின் ஓரங்களில்
ஸ்டிக்கர் பொட்டுக்கள் சிரிப்பதில்லை,

அளவில்லா ஆனந்தத்தைப் பிரதிபலிக்கும்
அதிர்வெண்ணில் கொலுசுகள் ஒலிப்பதில்லை,

வாசலின் ரங்கோலிகள் வண்ணம் தொலைத்து
எட்டுப்புள்ளி கோலமாகி  விட்டது.

கூட்டமாய் அனுபவிக்கும்
தனிமை ஒன்று  உருவாகி சுட்டது.

மொட்டை மாடியில் தோழியைக் காணாது தேயும் அம்புலிக்கு
அவள் முகவரி மாறிய கதையை எப்படிச் சொல்வது?

மகிழ்ச்சிப் பொட்டலத்தோடு  புகுந்த வீட்டிற்குச் சென்ற 
எங்கள் தேவதையின் பிரிவை எப்படி வெல்வது !!!


Sunday, March 24, 2013

படித்ததும் புரிந்ததும்

இங்கு யாரும் நீ முதல் நாள்
பார்த்த யாருமாய் இல்லை.
நீ கூட முதல் நாள் யாரும்
பார்த்த நீயாய் இல்லை.

உன் எதிர்பார்ப்புகளால்
யாரையும் மாற்ற முடியாது.
உன்னால்  ஒருவரை  மாற்ற இயலும்,
அது நீ...

புரிந்து  கொள்ளுதல் குறைந்து
போகும் பொது பிரிந்து செல்,
புரிந்து கொள்வாய்.

மாற்ற முடியாதவைகளை
ஏற்றுக்கொள்ள பழகு.
ஏற்றுக்கொள்ளவும்
முடியாவிடில் விலகி இரு. 

சுதந்திரம் என்பது கொடுக்கப் படுவதல்ல,
பறிக்கப்படாமல் இருப்பது...

அன்பு என்பது கட்டுபாட்டுக்குள்
வைத்து கவனிப்பது அல்ல,
திரும்பும் என்ற நம்பிக்கையில்
பறக்க விடுவது... 

Monday, May 28, 2012

பெண்ணாகிய ஊடகம்

உனக்கென்று  ஒரு வாசம் உண்டு,
இதழ்கள் உண்டு, அதில் வரிகளும் உண்டு.

உனக்குள் ஒர்  உலகம உண்டு, அதில் 
வதந்திகள் உண்டு, விளம்பரங்களும்   உண்டு.

உன் உண்மையில் சிறு பொய்களும் உண்டு.
மிகைப் படுத்தப்பட்ட உண்மையும் உண்டு.

உன்னிடம் சொல்லக் கூடாதது ரகசியம்,
ரகசியம் காக்கப்பட்டால் அது அதிசயம்.

உன்னை மதியாதவர் இப்பூமியின் அற்பம்,
உன்னை முழுவதும் படித்தவர் மிகச் சொற்பம்.

நீ பேசினால் வரலாறே மாறும்.
உன் அக்கரையில் சமூகமே  உயரும்.

பரிவருளும் பெண்ணே! பத்திரிக்கை ஊடகமே!
நீரின்றி அமையாது இவ்வுலகம், 
நீயின்றி அமையாது நற்சமூகம் . . . 



 

Wednesday, October 19, 2011

பொருள் வயின் பிரிதல்

Switch Case-ன் Variable போல கல்லூரியிறுதி 
நம் கனவுகளின் பாதைகளை வேறாக்கியது .

மழை கண்ட மரமாய் உடல் பருத்தது. ஆனால் 
மனம் புரியும் நட்பின் வட்டம் சிறுத்தது.

கையடக்க i-phone-ல் உலகமே உள்ளது. ஆனால்
அடிக்கடி SMS அனுப்ப ஆர்வமும் இல்லை,
Nokia 1100-வைப் போல் வசதியும் இல்லை. 

பல கை அளாவிய Mess Noodles 
Italian Restaurant -ல் கிடைப்பதில்லை.
Krishna Bakes Coffee-யின் சுவையை 
Cafe Coffee Day கூட தருவதில்லை.

அனுதினமும் அன்பைப் பொழிந்த தோழிகள் 
திருமணத்திற்கு அழைக்க மட்டுமே 
அலை பேசுவதுண்டு. அதிலும் சிலவை 
சம்பிரதாய மின்னஞ்சல்களாக மட்டும்.

இன்றிரவாவது நண்பனை அழைக்க 
மனம் நினைக்கும். ஆனால், இடையராத 
பளுவினால் தூக்கம் வந்து தொலைக்கும்.

அரிதாய் நண்பர்களை சந்திக்கும் போது 
நிகழ்களைப் பேசவே நேரமில்லை.
நினைவுகளை எவ்விதம் பேச? 

Thursday, August 4, 2011

மழைதலும் நனைதலும்

மென்பனி போர்த்திய மாலையில் 
மெல்லிசை கசிந்த வேளையில் 
அல்லல் மறந்து அலைகளில் 
விளையாடிக் கொண்டிருந்தோம். 

சினமடைந்த மேகங்கள் நம் மகிழ்வைக் 
களவாட மழைச் சாரலை அனுப்பியது.
நான் அணிந்திருந்த மழையங்கியை
அவசரமாய் உனக்கு அணிவித்தேன்.  
நீ வெட்கத்தை அணிந்து "அவ்வளவு 
அன்பா!?" என விழிகளில் வினவினாய்.

என்னால் நகைக்க மட்டுமே  முடிந்தது,
ஆம்,
நனைதலுக்கு பின் வரும் காய்ச்சலில்  
உன் அன்பு தரும் இதத்தை உனக்கு 
கூட கொடுக்காத வஞ்சகனான என்னால்
நகைக்க மட்டுமே முடிந்தது. 
களவாட முயன்று தோற்ற மழையால்
மழை(லை)க்க மட்டுமே முடிந்தது... 

Thursday, June 23, 2011

பொக்கிஷப் பெட்டகம்

வெகு நாட்களுக்குப் பிறகு கிடைத்த 
ஒலிநாடாவில் பதியப்பட்ட தங்கையின்
பள்ளிக்கூட ஆங்கிலப் பாடல்களில் 
மழலை இன்னமும் உள்ளது.

என் பதின்வயது பிறந்த தினங்களை 
பரவசப்படுத்திய பழுப்பேறிய
வாழ்த்தட்டைகளில் நண்பனின் 
பாசம் இன்னமும் உள்ளது.

நேந்து விட்ட சிகை மற்றும் முழியுடன்
நானும், சுற்றி உறவினர்களும் சிரிக்கும்
புகைப்படத்தில் கோவில் திருவிழாவின் 
குதூகலம் இன்னமும் உள்ளது. 

அழகியலும், அனுபவமும் சொல்லும் 
நினைவுச் சின்னங்கள் நிரம்ப உள்ளது
என் பொக்கிஷப் பெட்டகத்தில்.
ஆனால், 
நரைகளின் நாட்களில், நினைவுகளின் 
உணவிற்கு , வரிகள் தேடி மொழிகள் 
தோற்ற வர்ணனைக்கடங்கா உன் ரகசிய 
வெட்கங்களை எவ்விதம் பதிவது???